காந்தியவாதி சமுகசீர்த்திருத்தவாதி என்றறியப்பட்ட அன்னா ஹசாரே 40 வருடங்களாக தள்ளிபோடப்பட்டு வரும் லோக் பால் மசோதாவை கொண்டுவரும்படிக் கேட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். அவ்வளவுதான் திறந்த கண் திறந்தபடி இருக்க ஓன்றன் பின் ஒன்றாக பின் தொடர்ந்து செல்லும் ஆட்டு மந்தைகள் போல அன்னா ஹசாரே பின்னால் இலட்சம் பேர் திரண்டு விட்டனர். தீ பற்றிக்கொண்டது. ஆயிரமாயிரம் அநியாயங்கள் நடந்த போதெல்லாம் வராத உணர்ச்சி ஒரு வழியாக மக்களுக்கு வந்தே விட்டது. ஆங்காங்கே உண்ணாவிரதமிருந்து சாக பல பேர் துணிந்து விட்டனர். காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஊழல் பேயை விரட்டிய பரிதாபக் காட்சிகள் அரங்கேறின. இதுநாள்வரை வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த காந்திகள் உயிர் பெற்று ஓடி வந்தனர். உலகின் பின் தங்கிய நாடுகளில் இப்போது புரட்சி சீசன் நடப்பதைப்போல இந்தியாவிலும் நடக்கிறதோ என்று உலகமே வியந்தது.
ஆனால் ஆளும் மந்திரிகள் இந்த விசயத்தில் நாங்களும் நீங்களும் ஒன்றுதான் வாருங்கள் ஊழல் பேயை சேர்ந்தே விரட்டுவோம் என்று இவர்கள் கூடவே கைகோர்த்துக்கொண்டார்கள். யார் யாரை எதற்காக எப்படி எதிர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை. இந்நிலையில் தன் தைரியம் இல்லாத அரசை நாட்டமை செய்யத்துவங்கி விட்டார் அன்னஹசாரே. இந்த நாலு நாள் magic பல செய்திகளை நமக்குச் சொல்கிறது.
முதலாவது செய்தி - மக்கள் நினைத்தால் எந்த சட்டமும் தேவையில்லை ஆளும் அரசை தூக்கி எறிய முடியும்.
இரண்டாவது செய்தி - இந்திய அரசியல்வாதிகளின் உழல், முறைகேடுகளைக்கண்டு மக்கள் கொதித்து போயுள்ளனர்.
மூன்றாவது முக்கிய செய்தி - மக்களுக்கு அரசியல் அறிவும் கிடையாது, அக்கறையும் கிடையாது சிறிது கவனம் கூட கொடுக்க முடியாது. ஆனால் எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் உண்டு.
கவனிக்க வேண்டிய செய்தி - மக்கள் வெறும் ஆட்டு மந்தைகள்தான் அரசியல் பாமரத்தனம் அவர்களிடம் பொங்கி வழிகிறது.
அதிர்ச்சி அளிக்கும் செய்தியொன்றும் இருக்கிறது அதாவது, அளவில்லாத அதிகாரம்கொண்டவராகக் கடவுளைக்காட்டி கடவுளின் பெயரைச் சொல்லி ஆண்ட கதையைப்போலவே சந்தேகத்திற்க்கு அப்பாற்பட்டவராக காந்தியைக் காட்டிஅவர் பின்னால் நின்றுகொண்டு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியதைப் போலவே இன்றும் மக்கள் அதிகாரத்தை பெறமுடிகிற வாய்ப்பும் போக்கும் தலைதுக்குவதுதான் அந்த செய்தி.
ஏன் இப்படிச்சொல்ல வேண்டும் ...
அன்னாஹசாரேவும் அவரதுபின்னால் இருப்பவர்களும் கேட்பதுபோல ஜன லோக்பால் மசோதா கொண்டு வந்து விட்டால் நாட்டை விட்டு ஊழல் விரட்டப்பட்டு விடும்; அது ஒழிந்தால் வறுமை ஒழிந்து விடும்; அநியாயங்கள் அராஜகங்கள் அடங்கிவிடும்; எல்லாப் பீடைகளும் தொலைந்துவிடும். என்றெல்லாம் மக்கள் நம்புவது எவ்வளவு பேதைமை. “பின் மடையை அடைக்க முடியாது’ என்று விவசாயிகளுக்கு நன்றாகத்தெரியும் அது போல ஊழல் ஏன் உற்பத்தியாகிறது என்று சற்றும் யோசிக்காமல் அந்த ஓட்டையை அடைக்க முற்படாமல் பொங்கி வரும் நதியை கையால் தடுக்க முனைவதை எப்படி வர்ணிப்பது. அப்படிச்செய்து அடைத்து விடலாம் என்று சொல்வதை எப்படி நம்புவது. இன்று ஊழலில் கொடுப்பவர் வாங்குபவர் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள் victims என்றுதான் சொல்லமுடியும். ஏனெனில் கொடுப்பவர் கொடுக்க நினைக்கவில்லை வாங்குபவர் வாங்க நினைக்கவில்லை பொழைப்பை நடத்த வேறு வழியில்லை. வெட்கமில்லாமல் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ளவேண்டியதிருக்கிறது. அதாவது, இன்றைக்கு இலஞ்சம் கொடுக்க முடிவதால்தான் நிறுவனங்கள், வியாபாரிகள் தொழில் செய்ய முடிகிறது. இல்லையென்றால் அதிகாரிகள் நாடு வகுத்து வைத்திருக்கிற சட்ட திட்டங்களை உறுதியாகக் கடைப்பிடிப்பார்களென்றால் வரி வசூலிப்பார்களென்றால் அரசின் படிக்கட்டுகளில் பொது மக்கள் காத்து கிடக்க வேண்டியதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் இளையதலைமுறையினரை ஆயுதம் தூக்க வைத்திருக்கும். அமைதி நாட்டில் தொலைந்து போயிருக்கும்.
எனவே இலஞ்சம், ஊழல், சட்ட மீறல், கிரிமினல் நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் முக்கியக் காரணம் நாட்டுமக்களுக்கு பொருந்தாத சட்ட திட்டங்களும் அதிகமான வரியும்தான் இதை யாரும் கவனிப்பதில்லை. இந்த உண்மையைச் சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. இப்போதுகூட அன்னாஹசாரே பரிந்துரைத்துள்ள சாந்திபுசன் 200 கோடியை எந்தவிதமான அநியாயத்திற்கும் ஆட்படாமல் சேர்த்திருக்கமுடியாது என்கிற தைரியத்தில்தான் பிரச்சினை எழும்பி வருகிறது. இது ஒரு காரணம்.
அரசியலை புறக்கணித்துவிட்டு பிறகு அதை குறை சொல்லக் கூடாது. நாட்டுபிரசினைகளைக் கண்டுணர்ந்து மக்களுக்கு நியாயத்தை உணர்த்தி நல்ல அரசியல் மூலம் மக்கள் அதிகாரத்தைப் பெறமுடியாதவர்கள் அரசியல்வாதிகளைக் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை. ஏதோ ஒரு ஊரில் ஒரே ஒரு நல்லகாரியத்தை செய்துவிடுவதால் மட்டும் நாட்டை ஆள்கிற தகுதியும் அறிவும் வந்து விடாது. நல்லவர் என்கிற தகுதி மட்டும் போதாது என்பதை மக்கள் உணரவேண்டும். ஜனநாயக வழிமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இப்படி குறுக்கு வழியில் சென்று மிரட்டுவது ஒரு பின்பற்றப்படவேண்டிய வழிமுறை அல்ல. இது அவசரக்குடுக்கைகளின் வேலை. இது சரியென்றால் நாம் ஏன் தீவிரவாதிகளை ஆதரிக்க கூடாது. நாம் ஏன் அரசியலமைப்பை வகுத்து வைத்திருக்க வேண்டும். இப்போதுகூட தவறானவர்கள் என்றால் ஏன் அரசியல்வாதிகளை ஆட்சி செய்ய அனுமதிக்கவேண்டும். கெட்டுப்போன அரசியலை சீர்ப்படுத்த இதுவல்ல வழி. ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது என்றாவது மக்கள் உணர்ந்து கொள்ளக் கூடாதா .
நல்லவர்கள் அரசியல் விவரமறிந்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் மக்களுக்கு பொருந்துகிற நியாயமான கொள்கைகளால் மக்கள் ஆளப்படவேண்டும் அதுதான் முறை. மற்றதெல்லாம் போலிகள். அப்பாதைகளில் போனால் ஏமாற்றப்படுவார்கள் என்பது உறுதி.
அன்னா ஹசாரே: இந்தியாவின் டிராஃபிக் ராமசாமி
எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் படம் எதுவும் ரிலீஸ் ஆகாத குறையை கடந்த ஒரு மாத காலமாக தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம். திருச்சியில் 5 கோடி, திண்டிவனத்தில் 2 ஒரு கோடி, கூடுவாஞ்சேரியில் 1 கோடி என தினசரி தலைப்பு செய்திகளை தேர்தல் ஆணையமே ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்தக் கறார்த்தனத்துக்கு மிடிள்கிளாஸ் மக்களிடையேயும், ஊடகங்கள் மத்தியிலும் பெருத்த வரவேற்பு. ’இப்படில்லாம் பண்ணாதான் சார் இவனுங்க அடங்குவானுங்க’ என மத்திய வர்க்க மனநிலைக்கு இத்தகைய நடவடிக்கைகள் ஒரு வடிகாலாக அமைந்திருக்கின்றன. ஆனால் இந்த ஆக்ஷன் காட்சிகளால் விளைந்த பலன் என்ன? ஒரு செயல் அதன் பரபரப்புகளுக்காக அல்லாமல் நோக்கம் மற்றும் விளைவுகளைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும்.
தேர்தலில் புழங்கும் பணத்தைக் கட்டுப்படுத்துவது. இதன்மூலம் ஊழலை ஒழித்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது’. அதாவது எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கும் என்பது ஆணையத்தின் நோக்கம். அதனால்தான் பண பரிவர்தனையை மாய்ந்து, மாய்ந்து கட்டுப்படுத்துகிறது தேர்தல் ஆணையம். ஆனால் சட்டப்பூர்வமற்ற வகையில் பணம் பரிமாறப்படுவதை தேர்தல் ஆணையம் எதிர்க்கிறதேயன்றி, வாக்காளர்களை ஊழல்படுத்தும் இந்த சிஸ்டத்தை எதிர்க்கவில்லை. ’இருக்கும் நிர்வாக அமைப்பு சிறந்தததுதான், அதில் சில ஓட்டை, உடைசல்கள் இருக்கின்றன. அதை சரிசெய்துவிட்டால் வண்டி நன்றாக ஓடும்’ என முட்டுக்கொடுக்கவே முயற்சிக்கிறது. அப்படியானால் ’சட்டப்பூர்வமாக’ நடைபெறும் ஊழல்களைத் தடுப்பதற்கு என்ன வழி? தேர்தலை ஒரு பகடைக் காயாக மாற்றி ‘எங்களுக்கு ஓட்டுப்போட்டால் உங்களுக்கு மிக்ஸி தருவோம்’ என ஆஃபர் தருவதும், ‘எங்களுக்கு வாக்களித்தால் லேப்டாப் தருவோம்’ என பேரம் பேசுவதும்… மக்கள் நலனின் பெயரால் சட்டப்பூர்வமாக நடக்கிறது என்பதால் ஊழல் இல்லை என்றாகிவிடுமா? இவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா, இல்லையா என்பதல்ல இங்கு பிரச்னை. அதன் செயல்பாடுகள் சட்டப்பூர்வமற்ற ஊழல்களை மட்டுமே ‘ஊழல்’ என மதிப்பிடுகிறது.
இதையே பொதுப்புத்தியாக நிறுவுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் பூர்வீக பழங்குடிகளுக்கு சொந்தமான 1,10,000 ஏக்கர் நிலம் வன்முறையாக பிடுங்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இது ஊழலா, இல்லையா?
அதே மத்திய இந்தியாவின் தண்டகாரன்யா காடுகளில் இருக்கும் இரும்புத் தாது உலக சந்தையில் ஒரு டன் 7000 ரூபாய் விலைபோகிறது. இதை ஒரு டன் வெறும் 27 ரூபாய்க்கு ரெட்டி சகோதரர்களுக்கு விற்கிறது அரசு. இது ஊழலா, இல்லையா? ‘இவை எல்லாம் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வரவில்லை. ஆணையம் அதன் எல்லைக்குள் என்ன செய்ய இயலுமோ அதைத்தான செய்கிறது’ என இதற்கு பதில் வரும். ஆனால் நடைமுறையில் இது இந்த அளவுகோலில் புரிந்துகொள்ளப்படவில்லை. தேர்தல் ஆணையம் ஊழலை ஒழிக்க வந்த ரட்சகனாகவே மதிப்பிடப்படுகிறது. அவர்களும் அவ்வாறுதான் தங்களை கருதுகின்றனர் என்பது நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது. ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் விளைந்த விளைவுகள் என்ன?
பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது நிற்கவில்லை. அரசியல்வாதிகளிடம் பதுங்கிக் கிடக்கும் பணம், இம்மாதிரியான தேர்தல் சமயத்தில்தான் கொஞ்சமாவது வெளியே வரும். ஒலி-ஒளி அமைப்பாளர்கள், மேடை அமைப்பவர்கள், தோரணம் கட்டுபவர்கள், கலைக் கூத்தாடிகள், இசைக் கலைஞர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள், அச்சக உரிமையாளர்கள், பந்தல் பணியாளர்கள் என பெருந்தொகையிலான தொழிலாளர்கள் தேர்தல் காலத்தில்தான் கொஞ்சம் பணம் பார்ப்பார்கள். அவர்கள் அத்தனைப் பேருக்கும் இப்போது எந்த வேலையும் இல்லை. அரசியல்வாதிகள் கொள்ளை அடித்தபோது எல்லாம் கண்டுகொள்ளாது, கொள்ளையடித்தப் பணத்தை செலவு செய்யும்போது ஓடிவந்து தடுக்கிறார்கள். இதன்மூலம் மறைமுகமாக ஊழல்வாதிகளுக்கு காப்பரண்களாகவும் திகழ்கிறது தேர்தல் ஆணையம். இதுநாள் வரை மக்கள் ஓட்டரசியல்வாதிகளின் ஊழல் அரசியலில் சிக்கித் திளைத்து மக்கள் சலிப்புறும் சமயத்தில் கொஞ்ச நேரம் கௌரவ கதாபாத்திரத்தில் கதாநாயகத்தனம் செய்துகொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.
மிடிள் கிளாஸ் மனநிலைக்கு தீனி போடும் இந்த நடவடிக்கைகள் கொஞ்ச நாட்களுக்கு சக்சஸ்ஃபுல்லாக ஓடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழலின் அளவு இன்னும் பல்கிப் பெருகவே செய்யும். அப்போது அதைத் தடுக்க எந்த ஆணையம் வரும்? அன்னா ஹசாரே வருவாரா? ஊழலுக்கு எதிரான மசோதாவை சட்டமாக்கிவிட்டால் நாட்டில் ஊழலே ஒழிக்கப்பட்டுவிடும் என அன்னா சாமியாடுவதைப் பார்த்தால் காமெடியாக இருக்கிறது.
ஏற்கெனவே இங்கு ஊழல் செய்வது சட்டப்படி சரியானது என்று இருக்கிறதா என்ன? இந்த கோயிந்து கோரிக்கைக்கு நாடு முழுக்க ஆதரவு அலைப் பெருகியது தற்செயலான ஒன்றல்ல. இது திட்டமிடப்பட்டது. முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடியால் உலகம் முழுவதும் உருவாகி வரும் மக்கள் புரட்சி யூகிக்க முடியாத திசைகளிலும் தன் செல்வாக்கை நிலைநிறுத்திவருகிறது. இதைக்கண்டு உலகின் பல நாடுகள் அஞ்சுகின்றன. இந்தியாவில் இப்படி ஓர் புரட்சி தற்போது சாத்தியமில்லை என்றாலும், ஆளும் வர்க்கங்களுக்கு மக்கள் மனங்களில் உருவாகியிருக்கும் கூட்டு எதிர்ப்பு மனநிலையை உடனடியாக வடிய வைக்க வேண்டும். பசித்து குரைக்கிற நாய்க்கு ஒரு பொறைத்துண்டு வீசுவது போல, பொருளாதார நெருக்கடியால் உருவாகும் பிரச்னைகள் மற்றும் மத்திய கிழக்கின் எழுச்சி ஆகியவற்றினால் இந்திய மனங்களில் உருவாகிவரும் எதிர்ப்புணர்வை நோக்கி இந்த அரசு வீசியெறிந்த பொறைதான் அன்னா ஹசாரே.
இப்போது மட்டுமல்ல… மக்களின் எதிர்ப்புணர்வை வடிய வைக்க அரசே அவ்வப்போது இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். அந்த எல்லைக்குள் ’திறம்பட கோபப்பட்டால்’ நீங்கள் மிடிள்கிளாஸ் ஹீரோவாகலாம். எதிர்ப்புணர்வை ஓர் எல்லையில் நிறுத்தி வைத்து மழுங்கடிக்கும் வேலையை ஹசாரே திறம்படவே செய்து தந்தார். மற்றபடி ’ஆண்டி கரப்ஷன் ஃபோர்ஸ்’ நடத்த அன்னா ஹசாரே என்ன ரமணா விஜயகாந்த்தா? ஹசாரேவும் இந்த சிஸ்டத்தின் ஓட்டை, உடைசலை சரிசெய்து இதற்குள் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை கண்டடைந்துவிடலாம் எனவும், ஊழல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் நடப்பு ஜனநாயக அமைப்புக்குள்ளேயே தீர்வு உண்டு எனவும் நம்புகிறவர்தான். இந்திய அளவிலான டிராஃபிக் ராமசாமி என இவரை வரையறுப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு வழக்குப் போடும் டிராஃபிக் ராமசாமி மயிலாப்பூர் கோயிலுக்குள் அனைத்து சாதியினரும் சென்று வரும் உரிமைக்கு ஆதரவாக வழக்குப் போட மாட்டார். அதேபோல்தான் அன்னா ஹசாரே ஓட்டரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவாரேத் தவிர, கார்பொரேட் கொள்ளைகளைக் கண்டுகொள்ள மாட்டார்.
’ஊழலை ஒழிக்க வேண்டும்’ என மொன்னையாக பேசும் அவர், ‘தொலைதொடர்புத் துறையில் வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டி 2,500 கோடி ரூபாய் கொள்ளையடித்த ரிலையன்ஸ் நிறுவனத்தை விசாரிக்க வேண்டும்’ என்றோ, ‘ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் 2 ஜி அலைவரிசையைக் குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்த நிறுவனங்களை அரசு முடக்க வேண்டும்’ என்றோ கோரிக்கை வைக்கப் போவதில்லை. ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான கோரிக்கைகள். நாடு முழுக்கவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்டு வந்து நாட்டை மறுகாலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தியுள்ளனர். தாமிரபரணி தொடங்கி பிளாச்சிமடா வரை நாட்டின் நீர்வளம் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சுகின்றன. கடல்வளத்தை கடற்கரையோர மேலான்மை சட்டம் என்ற பெயரால் குத்தகைக்கு விடுகின்றனர். எல்லையோர இனங்களுக்கு அனுதினமும் துன்ப, துயரம் மட்டுமே மிச்சமாக இருக்கிறது. இவற்றை வெளிப்படையாகப் பேசி மக்களை அணி திரட்டும் வேலையை அன்னா ஹசாரே செய்வாரா? மாட்டார். அவரது பிரச்னை எல்லாம் ‘ஏம்ப்பா இல்லீகலா ஊழல் பண்றிங்க. சட்டப்படி ஊழல் பண்ணீங்கன்னா யார் உங்களைக் கேட்கப்போறா?’ என்பதுதான்.
இதற்காகத்தான் அவர் சட்டம் இயற்றச் சொல்லி போராடுகிறார். ஊழல் எதிர்ப்பு என்கிறார். அந்த ஊழலை உற்பத்தி செய்யும் இந்த அரசு என்னும் நிறுவனத்தை கேள்வி கேட்கமாட்டார். அதனால்தான் அவருக்கு பத்மபூஷன் தொடங்கி, பத்மஸ்ரீ வரை சகல அரச விருதுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன் உச்சமாக 2008-ம் ஆண்டு சிறந்த சமூக சேவைக்காக அன்னா ஹசாரேவுக்கு உலக வங்கி விருது வழங்கி கௌரவித்தது. உலக வங்கியால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவர் ஊழலுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவதும், அதை இந்திய மிடிள்கிளாஸ் மனநிலைக் கொண்டாடுவதும் எத்தனை நகைமுரண்? இதை எல்லாம் தாண்டி உண்ணாவிரதம், தன்னைத்தானே வருத்திக்கொள்வது, தற்கொலை செய்துகொள்வது… போன்றவற்றுக்கு எல்லாம் நடப்பு சூழலில் எந்தப் பொருளும் இல்லை.
ஒருவேளை உணவுக்குக் கூட வழியற்ற கோடிக்கணக்கானவர்கள் வாழும் நாட்டில் உண்ணாமல் இருப்பதை ஒரு போராட்டமாக செய்வது, அவர்களை நோக்கி கிண்டல் செய்வது போலதான். இதையும் தாண்டி, விதர்பா விவசாயிகள் தற்கொலை, காஷ்மீரிலும், மத்திய இந்தியாவிலும், வட கிழக்கிலும் இந்திய ராணுவக் கூலிப்படை நிகழ்த்திவரும் கொலைகள் என உயிர்களை பலியெடுப்பதை பெருவிருப்புடன் செய்து வருகிறது இந்த அரசு.
இப்படிப்பட்ட சூழலில் தனக்கு எதிரான சக்தி ஒன்று தன்னைத்தானே வருத்திக்கொண்டு மடிந்துப்போகிறது என்றால் அதற்காக இந்த அரசு மகிழ்ச்சி அடையத்தான் செய்யும். வடகிழக்கில் பத்து வருடங்களுக்கும் மேலாக அமுலில் இருக்கும் Armed Forces Special Powers Act (AFSPA) சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இரோம் சர்மிளா ஜானு உண்ணாவிரதம் இருக்கிறார். ஆனால் கேரளா முத்தங்கா காடுகளில் தங்கள் பூர்வீக நில உரிமையை ஆதிவாசிகளை ஒருங்கிணைத்து மக்கள் போராட்டம் மூலம் வென்றடைந்தார் சி.கே.ஜானு. இப்போது நமக்குத் தேவை சர்மிளா ஜானுவா, சி.கே.ஜானுவா என்ற கேள்வியையும் நாம் எழுப்பியாக வேண்டும். மறுபடியும் ஹசாரேவுக்கு வருவோம். அவர் வரையறுக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் வரைபடம் முதலாளிகளால் வரையப்பட்டது.
பாதுகாப்பான உடலுறவுக்கு காண்டம் அணியச் சொல்லி வலியுறுத்தப்படுவதைப் போல, பாதுகாப்பான ஊழலை உத்தரவாதப்படுத்த லோக்பால் மசோதாவை சட்டமாக்கச் சொல்கிறார் ஹசாரே. இந்த உண்மைகளை மறைத்து ஊடகங்கள் இவரை Romanticise செய்கின்றன. ஏனெனில் இந்திய மத்திய தர வர்க்கம்தான் இந்தியாவின் மிகப்பெரிய சந்தை. அந்த மத்திய தர வர்க்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஹசாரே பிரதிபலிக்கிறார்.
No comments:
Post a Comment